

சென்னை: சத்தியமங்கலம் வனப்பகுதி அருகில் உள்ள விண்ணப்பள்ளி கிராமத்தில் 53 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய புளியம்பட்டி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், விண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளை தரம் பிரித்து உரமாக்கும் வகையில், விண்ணப்பள்ளி கிராமத்தில் 53 லட்சத்து 60 ஆயிரம் செலவில், சுமார் 3 ஏக்கர் பரப்பில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் குப்பை கிடங்கு அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "புளியம்பட்டி நகராட்சியில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த குப்பைக் கிடங்கு அமைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. வனப்பகுதிக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைப்பதால் வன விலங்குகளும் பாதிக்கப்படும் என்று, வனத்துறை அதிகாரிகளும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது" என்று வாதிடப்பட்டது.
அப்போது நகராட்சி தரப்பில், நகராட்சிக்கு அருகில் வேறு இடங்கள் இல்லாததால் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இங்கு குப்பைகளை தரம் பிரித்து மட்கும் குப்பைகளை உரமாக்கி, அதை அருகில் உள்ள கிராம விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க இருக்கிறோம். மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தி சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பைக் கிடங்கைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்தக் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது" என்று விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அரசு தரப்பு விளக்கத்தையும், குப்பைக் கிடங்கு விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய புளியம்பட்டி நகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.