உதகையை அடுத்த பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி

உதகையை அடுத்த பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
Updated on
1 min read

உதகை: நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. பைக்காரா அருகே புலிகள் நடமாட்டமும் உள்ளது.

வனங்களிலிருந்து அவ்வப்போது புலி உள்ளிட்ட விலங்குகள், பைக்காரா அணையை ஒட்டியுள்ள கரையோரங்களில் வந்து நீர் அருந்தி செல்வது வழக்கம். பைக்காரா அணை முக்கூர்த்தி ஒதுக்குக்காடு பகுதி கரையோரத்தில் நேற்று புலி இறந்துகிடந்தது. இதை அந்த வழியாக படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலர் கவுதம், வனப் பணியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது: "சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில், 4 வயது மதிக்கத்தக்க பெண் புலி இறந்த நிலையில் தண்ணீரில் கிடந்தது. அதன் உடலில் காயங்களோ, பிற அறிகுறிகளோ ஏதும் தென்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே, புலி இறந்த-தற்கான காரணம் தெரியவரும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in