

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் மாதங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தென் தமிழகம் முதல் மத்தியப் பிரதேசம் வரை உள்ள பகுதிகளின் மேல் வடக்கு தெற்காக நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவில் கோடை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியுள்ளது. கோடைக் காலமான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும், உள் மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் கோடை வெயில் நிலவுவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் இடி மேகங்கள் 5 கி.மீ உயரம் வரை சென்றுள்ளதால் எந்தப் பகுதியில் மழை இருக்கும் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.
காட்டுத் தீ தொடர்பான வானிலை முன்னறிவிப்பிற்கு வனத் துறைக்கு வெப்ப நிலை குறித்த முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் உடனுக்குடன் வழங்கி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.