

ஓசூர்: கோடை காலத்தில் வன விலங்குகளின் குடிநீர் மற்றும் தீனி தட்டுப்பாட்டை தீர்க்க தேன் கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் நீரை நிரப்பவும், தீவனப்புல் தோட்டம் அமைக்கவும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 1,501 சகிமீ பரப்பளவு கொண்ட ஓசூர் வனக் கோட்டத்தில் காவிரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயம் உள்ளது. இங்கு யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இடம்பெயரும் யானைகள்: கோடைக் காலங்களில் ஆண்டுதோறும் தண்ணீர் தேடி கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா யானைகள் சரணாலயப் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்ட பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.
கடந்தாண்டு கர்நாடகா வனப்பகுதியிலிருந்து 100-க்கும்மேற்பட்ட யானைகள் வந்தன. அவை மீண்டும் கர்நாடகா வனப் பகுதிக்குச் செல்லாமல் சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சுற்றி வந்தன.
பயிர்கள் சேதம்: மேலும், அவை இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளை நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்தன. வனத்துறையின் தீவிர முயற்சிக்குப் பின்னர் அவை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
தற்போது, கோடைக்கு முன்னரே கடும் வெயில் உள்ளதால், வனப்பகுதியில் வன விலங்குகளுக்குக் குடிநீர் மற்றும் தீனி தட்டுப்பாடு ஏற்படும் நிலையுள்ளது. இதனால், வன விலங்குகள் வனக் கிராமப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
வனத்துறை தீவிரம்: இதனிடையே, வன விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டை மற்றும் செயற்கை தொட்டிகளில் நீர் நிரப்பவும், தீவனப் புல் தோட்டம் அமைக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி கூறியதாவது: தேன்கனிக்கோட்டை வனச் சரகத்தில் தொழுவபெட்டா, அய்யூர், கெம்பகரை, கொடகரை உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தமாக 60 யானைகள் உள்ளன. கடந்த வாரம் கர்நாடக மாநிலத்திலிருந்து 70 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
13 யானைகள் உள்ளன: அவற்றை மீண்டும் ஜவளகிரி வழியாக பன்னர்கட்டா வனப் பகுதிக்கு இடம்பெயரச் செய்துவிட்டோம். தற்போது, தேன்கனிக் கோட்டை, நொகனூர் வனப்பகுதி யில் 13 யானைகள் உள்ளன. வனப்பகுதியில் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது.
இதனால், கோடையில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க தண்ணீர் தொட்டி அமைத்தல், ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல், கசிவு நீர் குட்டை கட்டுதல், தடுப்பணை கட்டுதல், பழுதடைந்த கசிவு நீர் குட்டையைப் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், காப்புக் காட்டுக்குள் தீவனப்புல் தோட்டம் அமைத்து வருகிறோம். இதன் மூலம் வனவிலங்குகளை வெளியே வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.