Published : 13 Mar 2023 06:39 AM
Last Updated : 13 Mar 2023 06:39 AM

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை தணிக்க மான்களுக்கு `ஸ்பிரிங்ளர்' மூலம் நீர் தெளிப்பு

கடமான் கூண்டுக்குள் கோடை வெயிலுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் தெளிப்பான். படம் எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து பராமரிக்கும் வகையில், ஸ்பிரிங்ளர் தெளிப்பான், மயில்கள் இருப்பிடத்தில் பனித்தூவல் அமைப்பு உள்பட சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

சேலத்தை அடுத்த குரும்பப்பட்டியில், 31 ஹெக்டேரில் வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நரி, புள்ளி மான், கடமான், குரங்கு, தேவாங்கு, மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முதலை, நீர்ப்பறவைகள் உள்பட 24 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பராமரிக்கப்படுகின்றன.

சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் என தினமும் ஏராளமானோர் உயிரியல் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

இதனிடையே, கோடை காலம் தொடங்கிவிட்டதால், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், வனச்சரகர் உமாபதி தலைமையில் வன விலங்குகளுக்கு, வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, புள்ளி மான்கள், கட மான்கள் உள்ளிட்டவை உலாவும் பகுதியில், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளர் அமைத்து நீரை தெளித்து வருகின்றனர்.

இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அப்பகுதி குளிர்ச்சியாக இருப்பதுடன், மண்ணிலும் ஈரப்பதம் அதிகரித்து தரை சூடாவது தவிர்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளரில் வெளியாகும் நீர் சாரலில் நனைந்தபடி புற்களை மான்கள் மேய்கின்றன. இதேபோல குரங்குகள், கிளி உள்ளிட்டவற்றுக்கு வெயில் நேரத்தில் தர்பூசணி, வெள்ளரி பழங்கள் வழங்கப்படுகின்றன.

மயில் உலாவும் இடத்தில், வெயில் நேரத்தில் நீர் பனித்தூவலாக பரவுவது போன்ற அமைப்பு செய்யப்பட்டு, அங்கு குளிரூட்டப்படுகிறது. மேலும், வன விலங்குகள் உள்ள இடத்தில் எப்போதும் அவற்றுக்குத் தேவையான குடிநீர் மற்றும் தரையில் ஈரப்பதம் இருக்கும்படி தொடர்ந்து வனத்துறையினர் பராமரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x