அழிவின் விளிம்பில் வால்கரடு: சூழல் சீர்கேட்டை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அழிவின் விளிம்பில் வால்கரடு: சூழல் சீர்கேட்டை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

தேனி: சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருவதால் தேனியில் உள்ள வால்கரடு மலைப் பகுதியில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி பாரஸ்ட்ரோட்டுக்கு அருகில் வால்கரடு வனப் பகுதி அமைந்துள்ளது. முன்பு இங்கு சிறு விலங்குகள், மூலிகைச் செடிகள் அதிக அளவில் இருந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முனபு இந்த வனப்பகுதியையொட்டி சிறிய அளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை அதிக அளவில் பெருகி தற்போது தேனி நகரின் பிரதானப் பகுதியாக மாறிவிட்டது.

2013-ம் ஆண்டு வால்கரட்டின் பின்பகுதியில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக கரடின் ஓரப்பகுதிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு வாகன பயன்பாட்டுக்காக அகலப்படுத்தப்பட்டது. இதனால் வால் கரடுப் பகுதியில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே மதுபானக்கடை, மதுக்கூடங்களில் நேர வரையின்றி மது விற்பனை நடைபெறுகிறது.

மது பாட்டில்களுடன் வால்கரடு பகுதிக்குள் சென்று பலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பை குவிந்து கிடக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் குப்பையும் இந்த வனப்பகுதியில்தான் கொட்டப்படுகிறது. இது போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டால், வால்கரட்டின் அமைதியும், வளமும் குறைந்துவிட்டது.

இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டதால் விலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டன. மூலிகைச் செடிகள், அரியவகை மரங்கள் அழிந்துவிட்டன. இந்த காட்டுப் பகுதியில் வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி, அத்துமீறி உள்ளே செல்வோர், குப்பை கொட்டுவோர், மது அருந்தச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த இந்த வால்கரடு, குடியிருப்புகள் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் நகரின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. வனப்பகுதிக்குள் அத்துமீறிச் செல்வோரை எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in