

மதுரை: 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் 47 மயில்கள் விஷயம் வைத்த கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில், மீண்டும் 30 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் தெரியாமல் விசாரணையில் வனத் துறை அதிகாரிகள் திகைத்து வருகிறார்கள்.
மதுரை அருகே கடந்த 2018-ம் ஆண்டு அழகர்கோவில் சாலையில் உள்ள மருதங்குளம் பகுதியில் உள்ள கால்வாய், தென்னந்தோப்பு, கருவேல மரக் காடுகளில் 47 மயில்கள் இறந்து கிடந்தன. தகவலறிந்த மதுரை வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயில்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த மயில்கள் அருகே விஷம் கலக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் சிதறிக் கிடந்தன. மர்ம நபர்கள் நெற்கதிரில் விஷத்தைக் கலந்து மயில்களைச் சாகடித்தது வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால், தற்போது வரை மயில்களை யார் விஷம் வைத்து கொன்றார்கள் என்பது தெரியவில்லை. அந்த வழக்கு விசாரணையும் முடங்கிப்போய் விட்டது.
இந்நிலையில் 4 ஆண்டிற்கு கழித்து மதுரை மாவட்டம் கருப்பாயூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூலாம்குளம் கிராமத்தில் 30 மயில்கள் இறந்து கிடந்தன. மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மயில்கள் வழிநெடுக கொத்து கொத்தாக இறந்து கிடந்ததால் வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வனத்துறையினர் இறந்த மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயில்கள் நாட்டின் தேசிய பறவையாக இருக்கும் நிலையில் அதனை வேட்டையாடுபவர்களுக்கும், விஷம் வைத்து கொல்பவர்களுக்கும் வனத்துறை சட்டத்தில் கடுமையான தண்டனைகள் உள்ளன. ஆனால், மதுரையில் அடிக்கடி மயில்கள், வயல் வெளிகளில் பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி சிலர் மயில்களை விஷம் வைத்து கொல்வதும், தொழில் முறையாக வேட்டையாடுவதும் தொடர்கிறது.
மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா கூறுகையில், ‘‘இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுவிவரமும் தெரிய வரும். இதற்கு முன் இதேபகுதியில் 47 மயில்கள் இறந்தது பற்றிய விவரம் தெரியவில்லை. கண்டிப்பாக மயில்கள் வேட்டையாடப்படவில்லை. மாவட்டத்தில் எத்தனை மயில்கள் உள்ளன என்பது தெரியவில்லை. மயில்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.