துறை ரீதியாக காலநிலை மாற்ற செயல் திட்டங்கள்: ஆய்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு
சென்னை: தமிழக அரசின் உள்ள ஒவ்வொரு துறைகளையும் ஆய்வு செய்து, அந்தந்த துறையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் செயல் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இக்குழுவில் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலேகனி, உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சௌம்யா சுவாமிநாதன், ஐ.நா.சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், அரசு தலைமைச் செயலர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர், தொழில், நகராட்சி நிர்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம்,மீன் வளம், மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம், போக்குவரத்து, மின்சாரம் ஆகிய துறைகளின் செயலர்கள் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று (பிப்.3) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசில் உள்ள ஒவ்வொரு துறைகளையும் ஆய்வு செய்து, அந்த துறையில் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குழுவில் உள்ள சிறப்பு உறுப்பினர்களுக்கு தமிழக அரசில் உள்ள ஒரு துறை ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் அந்த துறையில் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு துறைகளிலும், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
