தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 49: ஒவ்வொரு சொட்டையும் மறுசுழற்சி செய்யலாம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 49: ஒவ்வொரு சொட்டையும் மறுசுழற்சி செய்யலாம்
Updated on
2 min read

நீ

ர்வரத்தின் அளவை வைத்து நீருக்கானத் துறையை நாம் வரையறை செய்ய வேண்டும். அதிக ஆழத்தில் செல்லும் வேர்களைக் கொண்ட மரங்கள் குறைவான நீரை எடுத்துக்கொள்ளும். அந்தக் குறிப்பிட்ட மரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய இடத்தில் அமைக்க வேண்டும். குறிப்பாக வேப்பமரம் நன்கு ஆழமாக வேரை இறக்கும் திறன் கொண்டது. இது வறட்சியைத் தாங்குவதோடு, காற்றின் வேகத்தையும் தாங்கக் கூடியது.

காய்கறிகளுக்கான நீர், கால்நடைகளுக்கான நீர் என்று அனைத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் கழிவாக வெளியேறும் நீரில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழுவு நீர், குறிப்பாக உடலையும், பாத்திரங்களையும், ஆடைகளையும், காய்கறிகளையும் கழுவிவிடும் நீர் இதை ‘கழுநீர்’ என்று கூறலாம். இந்த நீரை மீண்டும் மறுசுழற்சிக்கு எளிதாக உட்படுத்தலாம்.

அடுத்தபடியாக கழிவு நீர் என்று சொல்லப்படும் மாசுபட்ட நீர் அல்லது பாழான நீர். கழிவறைகளில் இருந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறும் நீர். தொழிற்சாலை வேதிப்பொருட்களால் மாசுபட்ட நீர். இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது மிகக் கடினம். பண்ணையில் நாம் மேற்கூறிய இரண்டு வகையான நீரையும் இரண்டு வகைகளில் மறுசுழற்சி செய்யலாம்.

கற்களையும், மணலையும் பயன்படுத்தி வடிப்பான் அமைப்பு மூலமாக கழுவு நீரை மறுசுழற்சி செய்துவிடலாம். இதற்கான செலவு மிகவும் குறைவு. மலம், சிறுநீர் ஆகியவற்றால் கழிவாக வரும் நீரை மட்கு உரம் செய்யும் முறையால் மறுசுழற்சி செய்ய வேண்டும் அல்லது அதற்குரிய செடிகளை வளர்த்துப் பயன்படுத்திவிடலாம்.

இந்த நீரைக்கொண்டு நேரடியாக உண்ணும் பயிர்களைச் சாகுபடி செய்யக் கூடாது, தீவனப் பயிர்களையும் சாகுபடி செய்யக் கூடாது. ஆனால் மூடாக்குகளுக்குப் பயன்படும் பயிர்களையும், மரக் கட்டைகளுக்குப் பயன்படும் மரப் பயிர்களையும் இதன் மூலம் வளர்க்கலாம். தமிழகத்தின் பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் வெளியேற்றப்படும் கோடிக்கணக்கான லிட்டர் கழிவுநீரைக் கொண்டு (கழுவு நீரும், கழிவு நீரும் கலந்துவிட்டதால்) சில ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சமூகக் காடுகளை உருவாக்கிவிடலாம்.

காற்று அல்லது புயல், வெயில் அல்லது நெருப்பு, நீர் அல்லது வெள்ளம் முதலிய புற ஆற்றல்களைக் கணித்து அவற்றின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு பண்ணையை ஒருங்கமைப்புச் செய்ய வேண்டும். முறையாக அமைக்கப்படும் ஒவ்வொரு பண்ணை அமைப்பும் (பயிர், கால்நடை, குளம்) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை செய்யும். அதேபோல ஒவ்வொரு செயல்பாடும் (நீரைச் சேமித்தல், வெப்பத்தைத் தடுத்தல்) ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செயல்படும்.

எடுத்துக்காட்டாக நீரைச் சேமிக்கும்போது மண் அரிமானம் தடுக்கப்படும், மரங்கள் வளர்க்கப்படும். வெப்பத்தைத் தடுக்கும்போது வீடு குளிர்ச்சியடையும், மட்குப் படுகையில் நுண்ணுயிர்கள் பெருக்கமடையும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்தபடியாக வினைத்தொகுகதிளைப் பற்றிப் பார்ப்போம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in