

கோவை: சிறுமுகை பெத்திக்குட்டையில் மஞ்சள் காமாலை நோயால் காட்டு யானை உயிரிழந்தது.
சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருப்பராயன் கோயில் பகுதியில் ஆண் யானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. அந்த யானையின் உடற்கூராய்வு, வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர், அவர் கூறும்போது, “உயிரிழந்த யானைக்கு4 முதல் 5 வயது இருக்கும். இறந்து ஒரு நாள் இருக்கும். யானையின் சிறு குடலில் உணவுப் பொருள் ஏதும் இல்லை. ஓரிரு நாட்கள் யானை உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்துள்ளது. பெருங்குடலில் பாதி ஜீரணமாகாத உணவுப் பொருட்கள் இருந்தன. கல்லீரல் வீங்கிப்போய் இருந்தது.
சிறு, சிறு கட்டிகள் இருந்தன. மஞ்சள் காமாலை நோயால் யானை உயிரிழந்துள்ளது. பாக்டீரியா, வைரஸ் நோய் பாதிப்பு ஏதேனும் இருந்ததா என்பதை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. உள்ளுறுப்புகள் சென்னையில் உள்ள கால்நடை பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன” என்றார்.