

பொள்ளாச்சி: கோவை பேரூர் பகுதியில் பிடிபட்டு, மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானையை காலர் கருவி மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை பேரூர் பகுதிக்குள் புகுந்த மக்னா யானை கடந்த 23-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மறுநாள் இரவு 8 மணிக்கு மானாம் பள்ளி மற்றும் உலாந்தி வனச்சரகத்துக்கு இடைப்பட்ட மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானைக்கு வனத்துறையால் காலர்ஐடி பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை, கருநீர் பாலம் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் குடித்த பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. மனித, வன உயிரின மோதல் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், ரேடியோ காலர் ஐடி உதவியுடன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பேட்டரி, ஜிபிஎஸ் கருவி மற்றும் கேன்வாஸ் பொருட்களால் செய்யப்பட்ட பெல்ட் போன்ற கருவிதான் ரேடியோகாலர் கருவி. இது அதிகபட்சம் 15 கிலோ எடை கொண்டது. மழை, வெயில் போன்ற எந்த காலநிலையிலும் பாதிக்கப்படாத வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வெளிப்படும் சிக்னல் மூலம் யானையை கண்காணித்து வருகிறோம்.
தொடர்ந்து 6 மணி நேரம் ஓரிடத்தில் ஜிபிஎஸ் சிக்னல் இருக்கும் பட்சத்தில் வனத்துறையினர் அங்கு சென்று யானையை கண்காணிப்பர். வனப் பகுதியில் இருந்து இந்த யானை வெளியேறுவதை முன்கூட்டியே அறிய முடியும் என்பதால் மனித வனவிலங்கு மோதலை தடுக்க முடியும். அத்துடன் ரீசீவர் மூலம் யானை எத்தனை அடி தூரத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் கரும்பு வயல் அல்லது புதர் பகுதியில் மறைந்து இருந்தாலும் யானையை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு தெரிவித்தனர்.