

முதுமலை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரத்தில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. வனப்பகுதி மற்றும் ஊரின் ஒதுக்குப் புறமான இடங்களில் இறந்த விலங்கினங்களின் உடல்களை இயற்கை முறையில் தின்று சுத்தம் செய்யும் பணிகளை கழுகுகள் மேற்கொண்டு வருகின்றன.
கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநிலத்தில் கழுகு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு காலங்களில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனால், கழுகுகள் குறித்து இதுவரை தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன. மேலும், 3 மாநிலங்களிலும் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 3 மாநிலங்களிலும் முதன் முறையாக ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோட்டில் மட்டும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, "முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், நாகர்கோலே புலிகள் காப்பகம், வயநாடு சரணாலயம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக தொடர் வன எல்லைப்பகுதிகளில் இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் மதிப்பிடும் பணி, நாளை (இன்று) மாலை நிறைவடைகிறது.
இதில், அந்தந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிபுணர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பக பகுதியில், பிணந்திண்ணி கழுகுகள் இருக்கும் இடங்களுக்கு 30 குழுக்கள் சென்று பணியை தொடங்கினர். இவர்களுக்கு எவ்வாறு மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்கள் தெப்பக்காடு சென்டரில் வழங்கப்பட்டன.
கழுகுகள் நடமாடும் இடங்கள், இறந்த விலங்கினங்களின் உடல்கள் உள்ள பகுதிகளில் கழுகுகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு குழுவினர் கணக்கிடுகின்றனர்" என்றார்.