நெல்லையில் மருத மரத்துக்கு திடீர் ஆபத்து - வெட்டி சாய்க்க திட்டம்?
திருநெல்வேலி: கோடைக்கு முன்னரே திருநெல்வேலியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், நிழல் தரும் மரங்களின் அருமையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
முன்னோர்கள் அக்காலத்திலேயே தொலைநோக்கு பார்வையில் சாலையின் இருபுறங்களிலும் நட்ட பழமையான மரங்கள் தான் தற்போதும் நிழல் தந்து வருகின்றன. சாலையோரங்களில் பொதுவாக புளிய மரம், வேப்பமரம், புங்கன், தேக்கு, ஈட்டி மரம், தோதகத்தி, மருது, யூக்லிப்டஸ், ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
ஆனால், இந்த மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது வேதனை அளிக்கக் கூடியது. வெட்டிக் கடத்துவது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக வெட்டுவது போன்றவற்றால் மரங்கள் குறைந்து வருகின்றன. திருநெல்வேலி மாநகரில் சாலைகள் விரி வாக்கம், புதிய கட்டுமானங்கள் போன்ற வற்றுக்காக பழமையான மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.
திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து நெல்லையப்பர் கோயில் வரையிலான நெடுஞ்சாலை, வண்ணார் பேட்டையிலிருந்து வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் வரையிலான திருவனந்தபுரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் ஓரங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான மரங்கள் இருந்தன.
தற்போது மரங்களையே காணவில்லை. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சாலையோரம் ஒற்றை மரமாக காட்சியளிக்கும் பழமையான மருதமரத்துக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை: இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “சுவாமி நெல்லையப்பர் நெடுஞ் சாலையில் மிஞ்சி நிற்கும் மருத மரம் இது. முன்பெல்லாம், சுவாமி நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் மருத மரங்கள் நிறைந்து காணப்பட்டன. சித்திரை திருவிழாவில் சுவாமி தீர்த்தவாரி செல்லும் போது பொதுமக்கள் மரத்தின் நிழலிலே பல கிலோ மீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்வார்கள்.
தற்போது, இங்கு ஒரே ஒரு மருதமரம் மட்டுமே எஞ்சியுள்ளது. சாலை விரிவாக்கம், மின் பராமரிப்பு என்று இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி விடக்கூடாது. இம்மரத்தை காப்பாற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
