

இயற்கையின் ஆற்றலை பாடியது சங்க இலக்கியம் என திருப்பூரில் நடைபெற்ற வனத்துக்குள் திருப்பூர் 8-ம் ஆண்டு நிறைவு விழாவில் எம்பி சு.வெங்கடேசன் பேசினார்.
வனத்துக்குள் திருப்பூர் நிகழ்வின் 8-ம் ஆண்டு நிறைவு விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி அமைப்பின் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி வரவேற்று பேசும்போது, ‘‘அப்துல்கலாமின் நினைவுநாளை ஒட்டி 8 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரில் நிகழ்ந்த அஞ்சலி செலுத்தும் மேடையில் உதித்த எண்ணம்தான் வனத்துக்குள் திருப்பூர். கரோனா காலகட்டத்தில்கூட, கொடையாளர்கள் உதவி செய்ததால்தான் இந்த திட்டம் தொய்வின்றி 8 ஆண்டுகளில் 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிந்தது’’ என்றார்.
வெற்றி அமைப்பு தலைவர் டி.ஆர்.சிவராம் பேசும்போது, ‘‘இன்றைக்கு ஒரு லட்சம் பேர், வனத்துக்குள் திருப்பூரில் மரம் நட காத்திருக்கிறார்கள். மனிதக் கழிவில் இருந்து மீத்தேனை பிரித்து, பயோகாஸ் தயாரிக்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 45 சதவீதம் மழை அளவு கூடியுள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய 50 வகையான மூங்கில்களை கொண்டு, மாநகராட்சியுடன் இணைந்து மூங்கில் பூங்கா அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ‘காலநிலை மாற்றமும்- தொழில் சூழ்நிலையும்’ என்ற தலைப்பில் பேசும்போது, ‘‘பல்வேறு இயற்கை பேரிடர்களால் கடந்த ஆண்டு மட்டும் இந்த உலகம் 145 பில்லியன் டாலர் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி 27 சதவீதம் சரிவை சந்தித்ததால், நமக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. பருத்தி விலை நமக்கு 10 மடங்கு அதிகரித்தது. வரப்போகும் ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தால் நெல், கோதுமை உற்பத்தி 30 சதவீதம் குறையப்போகிறது’’ என்றார்.
‘இயற்கையும், இலக்கியமும்’ எனும் தலைப்பில் மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பேசும்போது, ‘‘மற்ற பழங்கால இலக்கியங்கள் எல்லாம், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலையே பாடியது. தமிழ் சங்க இலக்கியம் மட்டும்தான் இயற்கையின் ஆற்றலை பாடியது. சங்க இலக்கியத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்கையைப் பற்றியது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 99 வகையான பூக்களை பட்டியலிட்டது சங்க இலக்கியம்தான். இயற்கையை பற்றிய பெரும் நுண்ணறிவின் அடையாளம்தான் சங்க இலக்கியம்’’ என்றார்.
ஓசை காளிதாசன், தமிழர்நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.