பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி சைக்கிளில் 50,000 கி.மீ. பயணம்: ஆந்திர இளைஞருக்கு திருவள்ளூரில் வரவேற்பு

குர்ரம் சைதன்யா.
குர்ரம் சைதன்யா.
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் சைதன்யா (22). இவர், பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம்- நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தொடங்கிய இந்த பயணத்தில், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இதுவரை 3,600 கி.மீ. தூரத்தைக் கடந்து, நேற்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்தார் அவரை பொதுமக்கள் வரவேற்றனர்.

தன் பயணம் தொடர்பாக குர்ரம் சைதன்யா தெரிவித்ததாவது:

`மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டிலேயே நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

தற்போது, `பிளாஸ்டிக் மறுசுழற்சி'யை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியாத சூழல்உள்ள நிலையில் அதை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேட்டைகட்டுப்படுத்த முடியும். இதைமையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.

625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 30மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கி.மீ. பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in