

சேலம்: கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால், அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வசிஷ்ட நதியை மீட்டெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் காய்கறி விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக சேலம் உள்ளது. வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட வட்டாரங்களில் பல்வேறு வகையான காய்கறிகள் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. தினமும் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை விவசாயிகள், தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
தினசரி வர்த்தகம் சுமார் ரூ.2 கோடி என தமிழகத்தின் மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தைகளில் ஒன்றாக தலைவாசல் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கறி விளைச்சலுக்கு முக்கிய நீர் ஆதாரமாக வசிஷ்ட நதி உள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவற்றால் வசிஷ்ட நதி அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் காய்கறிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படக் காரணமாக, முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வசிஷ்ட நதி. காய்கறிகள் மட்டுமின்றி, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, வெற்றிலை, பாக்கு என பல்வேறு பயிர்களின் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக வசிஷ்ட நதி இருந்து வருகிறது.
வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்படும்போது, படுகையில் உள்ள பல ஏரிகள் நிரம்புகின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி மேற்கொள்ள வழியேற்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக கரையோரங்களில் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, நகராட்சிகளின் கழிவுநீர் கலப்பு, பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பு உள்ளிட்டவற்றால், வசிஷ்ட நதியானது அழிவு நிலையை நோக்கி செல்கிறது.
வசிஷ்ட நதியில் கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கு என்பதே இல்லாமல், மழைக் காலங்களில் ஓடை போன்ற நீரோட்டம் மட்டுமே ஏற்படுகிறது. மாவட்ட கிழக்குப் பகுதிகளில் கோடையில் 700 அடிக்கும் கீழே நீர் மட்டம் சென்று விடுகிறது. பல கிராமங்களில் விவசாயம் கைவிடப்பட்டு வருகிறது.
இந்நிலை நீடித்தால், தமிழகத்தின் காய்கறி களஞ்சியமாக உள்ள சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வறண்ட பகுதியாக மாறிவிடும்; குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
விவசாயத்தை பாதுகாக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாகவும், வசிஷ்ட நதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், வசிஷ்ட நதியில் கழிவுநீர் கலப்புக்கு தடை விதித்து, வசிஷ்ட நதி சுத்திகரிப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
வசிஷ்ட நதியில் கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளப் பெருக்கு என்பதே இல்லாமல், மழைக் காலங்களில் ஓடை போன்ற நீரோட்டம் மட்டுமே ஏற்படுகிறது.