உடுமலை, அமராவதி மலைக்கிராமங்களில் லண்டானா உண்ணிச்செடி பரவல்: சருகுமான் இனத்துக்கு ஆபத்து என எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உடுமலை: உடுமலையை அடுத்த மலைக் கிராமங்களில் லண்டானா எனும் உண்ணிச்செடி அதிக அளவில் பரவி வருவதாகவும், இதனால் சருகுமான் இனம் அழியும் நிலையில் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்டு தளிஞ்சி, கோடந்தூர், மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் நிறைந்த இந்த மலைக்கிராமங்களில், கடந்த சில ஆண்டுகளாக லண்டானா எனப்படும் உண்ணிச்செடி வேகமாக பரவி வருகிறது.

அதனால் வன விலங்குகளுக்கு தேவையான தாவர வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், சருகுமான் உள்ளிட்ட அரிய வகை வன விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: மலைவாழ் கிராமங்களை ஒட்டிய வனப்பகுதிக்குள் படர்ந்து வரும் லண்டானா உண்ணிச்செடியால், எந்த பயனும் இல்லை. 2 அடி உயரமுள்ள லண்டானா உண்ணிச்செடி, சருகுமான் இனத்துக்கு தேவையான புல் வகைகளை வளரவிடாமல் தடுக்கிறது. ஏற்கெனவே வேகமாக அழிந்து வரும் வன விலங்குகள் பட்டியலில் சருகுமான் உள்ள நிலையில், லண்டானா உண்ணிச்செடியின் வளர்ச்சி அவற்றுக்கு பேராபத்து.

நூறு நாள் வேலைவாய்ப்பு கூட கிடைக்காத நிலையில் உண்ணிச்செடிகளை அகற்றும் பணிகளை மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் உண்ணிச் செடி அழிக்கப்படுவதோடு, மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதேபோல தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணியையும் மலைவாழ் மக்களுக்கே ஒதுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in