Last Updated : 05 Feb, 2023 04:17 AM

 

Published : 05 Feb 2023 04:17 AM
Last Updated : 05 Feb 2023 04:17 AM

மது குடிப்போர் ஊடுருவலால் வளத்தை இழந்த வால்கரடு - தேனியின் பரிதாப வனச்சிதைவு

தேனி: தேனியில் உள்ள வால்கரடு பகுதியில் வாகன இரைச்சல், பொதுமக்கள் நடமாட்டம், மது குடிப்போர் ஊடுருவல் போன்ற இடையூறுகளால் சிறு விலங்குகள் இடம் பெயர்ந்து விட்டன. மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் மக்காத குப்பையால் மூலிகை, மழைநீர் பாதைகள் மறைந்து வால்கரடு சிதைவு நிலையில் உள்ளது.

தேனி பாரஸ்ட் ரோட்டுக்கு அருகில் வால்கரடு அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நரி, முயல், பாம்பு, கீரி உள்ளிட்ட ஏராளமான சிறு விலங்குகளும், பறவை வகைகளும் வசித்தன. மேலும் அதிகளவிலான மூலிகைச் செடிகளும் இருந்தன. குறிப்பாக, கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி செடிகள் கரடு முழுவதும் அதிகளவில் இருந்தன.

இதனால் கரட்டைச் சுற்றிலும் கற்பூர வல்லியின் வாசனை அதிகமாக இருக்கும். விலங்குகள் நடமாட்டத்துடன், ஆள் அரவமற்று இருந்ததால் இப்பகுதிக்கு பாரஸ்ட் ரோடு என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் சிறிதாக தொடங்கிய குடியிருப்புகள் 40 ஆண்டுகளில் அதிகரித்து, இன்று தேனியின் பிரதான பகுதியாக மாறி விட்டது.

மேலும் 2013-ம் ஆண்டு வால்கரடின் பின்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக கரட்டின் ஓரப்பகுதிகள் தகர்க்கப்பட்டு வாகன பயன்பாட்டுக்காக அகலப்படுத்தப்பட்டது. இதனால் கரட்டுப் பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது. கரட்டின் அருகில் உள்ள சிலர் தங்களின் கால்நடைகளை வளர்க்கும் பகுதியாக கரட்டினை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய பேருந்துநிலையம் அருகே மதுபானக்கடை, மதுக்கூடத்தில் நேரவரையறை இன்றி மது விற்கப்படுகிறது. மதுவாங்கும் பலரும் இந்த கரட்டில் குழுவாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் கரட்டின் பல இடங்களிலும் நடைபாதை அதிகளவில் உருவாகி விட்டன. குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளின் மக்காத குப்பை அதிகளவில் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

இதனால் மழை நீரோட்டப் பாதைகள் மறைந்து விட்டன. இதுபோன்று பல பக்க தாக்குதலால் வால்கரட்டின் அமைதியும், வளமும் சிதைந்து விட்டது. சிறு விலங்கினங்கள் கொல்லப்பட்டதுடன் எஞ்சியவை அருகில் உள்ள கரடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன. மூலிகை, அரிய வகை மரங்கள், விலங்குகள் என்றிருந்த வால் கரடு தற்போது தனது அனைத்து வளங்களை இழந்து பொது பயன்பாட்டின் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் மட்டும் கரட்டின் அடிவாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கரட்டின் தன்மையே மாறி கிடக்கிறது. வனத்துக்கு அருகில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்தால், அதன் வளம் எந்தளவுக்கு சிதைக்கப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த வால்கரடு திகழ்கிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஒதுக்குப் பகுதியில் இருந்த இந்த கரடு தற்போது அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக, பேருந்து நிலையம் வந்த பிறகு கரட்டில் ஊடுருவல்கள் அதிகரித்து விட்டன. அவ்வப்போது இது குறித்து எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x