

சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கொட்டநத்தான் ஏரி, சாயக்கழிவு நீர் கலப்பு, ஆகாயத்தாமரை படர்வு,குப்பை கொட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளால் அழிவு நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டியில், 330 ஏக்கரில் அமைந்துள்ள கொட்டநத்தான் ஏரியின் நீர் ஆதாரத்தைக் கொண்டு, நெய்க்காரப்பட்டி, சின்ன கொண்டலாம்பட்டி, அட்டவணை பூலாவரி, தார்க்காடு உள்பட 8 கிராமங்களில் 1,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், மீன்பிடி ஆதாரமாகவும் ஏரி இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மையான நீர் வளத்துடன் கடல் போல காட்சியளித்த ஏரி, தற்போது ஆகாயத்தாமரை படர்ந்து, நீர் பரப்பைக் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டது.
இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்கள் சிலர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கொட்டநத்தான் ஏரியில் நீர் நிரம்பி, பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. மேலும், மீன் வளர்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஏரியின் சுற்றுப் பகுதிகளில் தற்போது20-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் வந்துவிட்டன.
அங்கிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரும், சில தொழிற்சாலைகளின் கழிவுநீரும் ஏரியில்கலக்கிறது. இதன் காரணமாகஏரியில் மீன்வளம் அடியோடு அழிந்துபோனது. ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை மொத்த நீர்ப்பரப்பையும் ஆக்கிரமித்து விட்டது. சாயக்கழிவு நீரின் தாக்கம்அதிகமிருப்பதால், ஆகாயத்தாமரை செடிகள் முழுவதும் கருகி, காய்ந்த செடிகளாக ஏரியின் பரப்பில் நிரம்பியுள்ளன.
இதனிடையே, ஏரியின் கரைகளில் குப்பை குவிக்கப்பட்டு, எரியூட்டப்படுகிறது. ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக, கொட்டநத்தான் ஏரி அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏரியின் அழிவால், நிலத்தடி நீர் வளம் கெட்டு, விவசாயம் பாதித்து வருகிறது. மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நீர் வரத்து பாதிப்பு, நீர் மாசு என பல்வேறு காரணங்களால், கொட்டநத்தான் ஏரி சில ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத அசுத்த நிலைக்கு சென்றுவிடும்.
எனவே, ஏரியை தூர் வாரவும், சாயக்கழிவு நீர் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் வரத்தை மேம்படுத்த வேண்டும். ஆகாயத்தாமரை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும். நீர் வள ஆதாரத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, ஏரியை மீட்க வேண்டும், என்றனர். கொட்டநத்தான் ஏரியின் நீர் ஆதாரத்தைக் கொண்டு, 8 கிராமங்களில் 1,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.