

ஓசூர்: அய்யூர் வனப்பகுதியில் பயணிகள் சிலர் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே அய்யூர் வனப் பகுதியில் யானைகள், மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வனத்துறை சார்பில் அங்கு சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் உள்ளன. இதைப் பார்வையிட வெளியூர் மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள பூங்காவிருந்து சிறிது தூரத்தில் வனவிலங்குகள் தண்ணீர் அருந்த ஏரி உள்ளது. அந்த ஏரியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்திவிட்டு, குளித்துச் செல்லும். ஏரியின் அருகே வனத்துறை சார்பில் யானை பாதுகாப்புத் திட்டத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி அங்கு வரும் பயணிகள் சிலர் இரவு நேரங்களில் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து தீ மூட்டிக் குளிர் காய்ந்து மது அருந்தி விட்டு காலிப் பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்கின்றனர்.
இதனால், அங்கு வரும் வனவிலங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அப்பகுதியில் காய்ந்த மூங்கில் உள்ளதால், வனப்பகுதியில் தீவிபத்து ஏற்படும் சூழல் உள்ளது என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மலைவாழ் மக்கள் கூறியதாவது: இப்பகுதி வழியாக தினசரி நாங்கள் சென்று வருகிறோம். வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லை, ஆனால், இரவு நேரங்களில் போதிய கண்காணிப்பு இல்லாததால், இப்பகுதியில் பயணிகள் சிலர் அத்துமீறி தீ மூட்டி (பையர்கேம்ப்) அங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர்.
அப்போது அங்கு வன விலங்குகள் வந்தால், சத்தம் போட்டு இடையூறு செய்கின்றனர். இதைத் தடுக்க வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.