

கோவை / உடுமலை: வனத்துறை சார்பில் கோவை, உடுமலையில் உள்ள குளங்கள், நீர்நிலைகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நேற்று நடைபெற்றது.
இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, ‘‘பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 83 பேர் பங்கேற்றனர். வாளையாறு, குறிச்சிகுளம், உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், சிறுமுகை பெத்திக்குட்டை, ஆச்சான்குளம் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. பறவைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.
திருப்பூர் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் கூறியதாவது: திருப்பூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம்குளம் உள்ளிட்ட 20 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
வனத்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள் காட்டி, பாம்பு தாரா, நீர்க்காகம், சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீல தாலை கோழி, நாமக் கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீல வால் கீச்சன், தவிட்டு குருவி உள்ளிட்ட பல விதமான பறவைகள் கணக்கிடப்பட்டன.
இதில் வன அலுவலர்கள் சிவக்குமார், சுரேஷ்குமார் உட்பட வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.