

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 15 நீர்நிலைகளில் நடந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணியில், 100-க்கும் அதிகமான பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காப்புக் காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான பாரூர் ஏரி, ராமநாயக்கன ஏரி, ஆவலப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 15 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்றுநடந்தது.
இதில், வன அலுவலர்கள், பணியாளர்கள், பறவைகள் குறித்த முன் அனுபவம் உள்ள நிபுணர்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான பறவை யினங்களைக் கண்டறிந்து பதிவு செய்தனர்.
மஞ்சள் மூக்குநாரை: தொலை நோக்கு கருவி, கேமரா உள்ளிட்டவை பயன்படுத்தி பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, செந்நாரை, மீன்கொத்திகள், கடலை குயில், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 100-க்கும் அதிகமான பறவையினங்கள் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டன.
மேலும், டிவிஎஸ் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை காணப்பட்டது. வலசை செல்லும் பறவையான இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜூன் வரை இங்கு வலசை வந்து, பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்து பிறகு வலசை செல்ல தொடங்கும்.
இவ்வகை பறவைகள் இங்கு கடந்த 20 ஆண்டுகளாக வலசைவந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. மேலும், அஞ்செட்டி அருகில் உள்ள பனை ஏரியில் பிளாக் ஸ்டார்க், அகலவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவையினங்களும், தளி அருகே உள்ள வண்ணம்மாள் ஏரியில் பாம்புண்ணி கழுகு பறவையினமும் காணப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.