

போபால்: சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் மூலமாக நமிபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட 8 சிவிங்கிப்புலிகளில் ஒன்றான சாஷா சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்கா பிரிவு வன அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா கூறுகையில்," தினசரி கண்காணிப்பின் போது திங்கள்கிழமை சாஷா என்ற பெண் சிவிங்கிப்புலி மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் காணப்பட்டது. உடனடியாக சாஷா தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது அதற்கு சிறுநீரக தொற்றும், நீர்சத்துக்குறைபாடும் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தவிர மற்ற சிவிங்கிப்புலிகள் நலமாக உள்ளன. சாஷா தீவிர கண்காணிப்பில் உள்ளது.
போபாலில் உள்ள வேன்விஹாரில் இருந்து டாக்டர் அதுல் குப்தா தலைமையிலான மருத்துவக் குழு தேவையான அனைத்து உபகரணங்களுடன் குனோ வந்துள்ளது. சாஷாவின் சிகிச்சை குறித்து நமீபியா மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள விலங்குகள் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது" என்றார்.
கடந்த காலங்களில் இந்தியாவில் வாழ்ந்த ஆசிய சிவிங்கிப்புலிகள் 1952ம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு விலங்குகளை மாற்றும் திட்டத்தின் படி உலகில் முதல்முறையாக இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளான்று நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன. நவம்பரில் அவைகள் பெரிய தடுப்பு பகுதிக்கு மாற்றப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டன.