சென்னையில் ரூ.6 கோடியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்க அரசாணை

சென்னையில் ரூ.6 கோடியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்க அரசாணை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு 1,000 கி.மீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரையை கொண்டது. இதில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. ஆலிவ் ரிட்லி என்ற இன ஆமைகள் அதிக அளவில் தமிழக கரையில் முட்டையிடுகின்றன. இந்த ஆமைகள் கடல் சூழலியலை பாதுகாப்பதிலும், மீன் வளத்தை பெருக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

அதனால், இவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ரூ.6 கோடியே 30 லட்சத்தில் சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைப்பது தொடர்பான கருத்துருவை வனத்துறையின் தலைமை வன உயிரின காப்பாளர் அரசுக்கு அனுப்பி இருந்தார். இதை பரிசீலித்த அரசு, இத்திட்டத்துக்கு அனுமதி அளித்து நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in