

ஓசூர்: தேன்கனிக்கேட்டை வனப்பகுதியிலிருந்து சானமாவு பகுதிக்கு யானைக் கூட்டம் இடம் பெயர்ந்துள்ளது. இதையடுத்து, கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது தனித்தனியாகப் பிரிந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 40 யானைகள் வெளியேறி ஊடே துர்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதிக்குச் சென்றன. இவை செல்லும் வழியில் விளை நிலங்களுக்குள் சென்று அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தின. ஏற்கெனவே சானமாவு பகுதியில் 4 யானைகள் சுற்றித் திரிந்த நிலையில் தற்போது சென்ற யானைகளுடன் அங்கு 44 யானைகள் முகாமிட்டுள்ளன.
இதையடுத்து, சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள பீர்ஜேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, போடிச்சிப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சானமாவு வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.