

கூடலூர்: கேரளாவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை வனத்துறையினர் கரால் என்று அழைக்கப்படும் மரக்கூண்டில் அடைத்தனர். இந்த யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் 65-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய மக்னா யானை (தந்தமில்லாத யானை) இருவரை கொன்றது. பொது மக்கள் போராட்டத்தையடுத்து, கடந்த மாதம் 9-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில், ‘ரேடியோ காலர்' பொருத்தி விடுவிக்கப்பட்டது.
அங்கிருந்து, 170 கி.மீ., நடந்து கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி கடை வீதிக்கு சென்ற யானை, பாதசாரி ஒருவரை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்தது. இந்நிலையில், யானையை அருகிலுள்ள குப்பாடி வனத்துக்குள் விரட்டி கண்காணித்த வயநாடு வனத்துறையினர் நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர்.
பின்னர் லாரியில் ஏற்றி வயநாட்டில் உள்ள முத்தங்கா சரணாலயத்துக்கு யானையைக் கொண்டு சென்றனர். பிடிக்கப்பட்ட மக்னா யானை, முத்தங்காவில் தயார் நிலையில் இருந்த கரால் என்று அழைக்கப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. கராலில் ஏற்ற முயன்ற போது, யானைக்கு மயக்க ஊசி செலுத்திய கால்நடை மருத்துவர் அருண் சக்கரியாவின் காலை யானை பிடித்து இழுத்தது.
காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முத்தங்கா வனவிலங்கு காப்பக காப்பாளர் அப்துல் அசிஸ் கூறும் போது, ‘மக்னா யானை ஆக்ரோஷமாக இருப்பதால், வனத்துறையினர் பாதுகாப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார்.