உயிரிழந்த கே.வி.ஜெயபாலன் | கோப்புப் படம்
உயிரிழந்த கே.வி.ஜெயபாலன் | கோப்புப் படம்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை பாதுகாக்க வேண்டி உயிரை மாய்த்துக்கொண்ட சூழலியல் செயற்பாட்டாளர்

Published on

பாலக்காடு: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை பாதுகாக்க வேண்டி தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் சூழலியல் ஆர்வலரான கே.வி.ஜெயபாலன். சமூக வலைதளம் மூலம் தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 வயதான அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சாம்பாறா டவுனை சேர்ந்தவர். சூழலியல் செயற்பாட்டாளரான அவர் கிரீனரி கார்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியுள்ளார். அதன் ஊடாக அந்த மாவட்டத்தில் உள்ள நெல்லியம்பதி மலைப் பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை மாதந்தோறும் கடந்த 5 ஆண்டுகளாக அகற்றியும் வந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்த அவர், கடந்த சனிக்கிழமை அன்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக பாலக்காட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.

சுமார் 10 பக்க அளவில் அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை பாதுகாக்க சில யோசனைகளை அவர் சொல்லியுள்ளார். பள்ளி அளவிலான பாடத்திட்டத்தில் மலைத் தொடர் குறித்து சேர்ப்பது, கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக கருதுவது போன்றவை இதில் அடங்கும். இந்த மலைத் தொடரை பாதுகாக்க யாரும் முன்வராததால் தனது உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in