

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இந்நகரம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக புதையும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது இந்நகரம். இந்த இயற்கை பேரிடருக்கு எந்தவித திட்டமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள்தான் காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரைமுறையற்ற கட்டுமானங்கள் மட்டுமின்றி தேசிய அனல் மின் கழகத்தின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தாலும் இந்தப் பகுதி இந்த நிலையை எதிர்கொள்ள காரணம் எனவும் அவர்கள் சொல்லியுள்ளனர். பிரம்மாண்ட நீர் மின் திட்டமும் இதற்கு ஒரு காரணம் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 60 குடும்பங்கள் தற்காலிக மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக சமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷி குரானா தெரிவித்துள்ளார். சுமார் 90 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனவும் தகவல்.
அந்த நகரில் சுமார் 4,500 கட்டிடங்கள் இருப்பதாகவும். அதில் தற்போது 610 கட்டிடங்களில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும். அதனால் அங்கு வாழ முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை
கடந்த 1970-களில் இந்த நகரில் நிலச்சரிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. அதையடுத்து அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 1978-ல் தாக்கல் செய்த அறிக்கையில் பெரிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட கூடாது என்று சொல்லி இருந்தது. ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் அந்த பகுதியில் கட்டுமான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வல்லுநர்கள் கருத்து
“ஜோஷிமத் நகரம் தற்போது எதிர்கொண்டு வரும் சூழல் நமது சுற்றுச்சூழலை மீள முடியாத அளவுக்கு நாம் எந்த அளவிற்கு சிதைத்து வருகிறோம் என்பதை நினைவூட்டுகிறது” என சுற்றுச்சூழல் ஆர்வலர் அஞ்சல் பிரகாஷ் சொல்கிறார். மேலும், இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மின் திட்டங்களையும் இதற்கு ஒரு காரணம் என அவர் சொல்கிறார்.
“முக்கியமாக இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வரைமுறையற்ற கட்டுமானங்கள். இரண்டாவது காலநிலை மாற்றம். இதற்கு முன்னர் 2021 மற்றும் 2022-லும் இதே போல இயற்கை பேரழிவு சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு காலநிலை மாற்றம் முக்கியக் காரணம்.
அதீத மழை, அதைத் தொடர்ந்து நிலச்சரிவு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் கூட பேரழிவுகளை ஏற்படுத்தும். அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
2019 மற்றும் 2022-களில் வெளியிடப்பட்ட ஐபிசிசி-யின் அறிக்கைகளில் இமயமலை பகுதியில் பேரழிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
மிகவும் வலுவான திட்டமிடல் கொண்ட செயல்முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இமயமலையில் என்ன செய்யக்கூடாது என்பதற்கு ஜோஷிமத் ஒரு தெளிவான உதாரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.
புவியியல் பேராசிரியர் ஒய்.பி.சுந்த்ரியால் தெரிவித்தது. “2013 கேதார்நாத் வெள்ளம் மற்றும் 2021 ரிஷி கங்கை திடீர் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து அரசாங்கம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இமயமலை மிகவும் பலவீனமான சூழல் அமைப்பை கொண்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்கங்களுக்கு ஆளாகக்கூடிய நில அதிர்வு மண்டலம் 5 அல்லது 4-ல் அமைந்துள்ளன. வலுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும். அதை அவசியம் செயல்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப் பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மலைப் பகுதிகளில் 825 கி.மீ. தொலைவுக்கு `சார் தாம்' நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஏற்கெனவே பலமுறை கவலை தெரிவித்திருந்தனர். ஆனால், தேசியப் பாதுகாப்பை காரணம் கூறி, உச்ச நீதிமன்றம் 2021-ல் எதிர்ப்புகளை நிராகரித்துவிட்டது.
இங்கு ஹெலாங் என்ற இடத்தில் இருந்து, மார்வாரி என்ற பகுதி வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதுவும் நிலப் பகுதியில் ஏற்படும் விரிசல்களுக்குக் காணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.