குஜராத் | திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்த 2 சிங்கங்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

அம்ரேலி: குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தின் கிர் வனப்பகுதியில் திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்த ஆண், பெண் சிங்கங்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிர் (கிழக்கு) இணை வனப்பாதுகாவலர் ராஜ்தீப்சிங் ஜாலா கூறியதாவது: "சுமார் ஐந்து முதல் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிங்கங்கள் வெள்ளிக்கிழமை காலையில் கம்பா தாலுகா, கேடா கிராமத்தின் அருகில் ஒரு சுற்றித் திரிந்த போது விவசாயி கிணற்றின் விழுந்துள்ளன. இதுகுறித்து கேள்விப்பட்ட உடனேயே அந்த விவசாயி எங்களுக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையின் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது சிங்கங்கள் இரண்டும் நீரில் மூழ்கி இறந்திருந்தன. சிங்கங்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன” என்றார்.

“திறந்த வெளி கிணறுகளில் சிங்கங்கள் விழுந்து உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், கடந்த 2007 - 08 ஆண்டுகளில் அம்ரேலி மற்றும் கிர் சோம்நாத் மாவட்டங்களில் உள்ளடக்கிய கிர் வனப்பகுதியின் கிழக்கு பகுதியில் உள்ள 11,748 கிணறுகள் 'பாராபெட்' மூலம் மூடப்பட்டன. அவற்றில் அம்ரேலியில் 8,962 கிணறுகளும், கிர் சோம்நாத் பகுதியில் 2,782 கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எங்கள் வனச்சரகப்பகுதியில் மூடப்பட்டவை மட்டுமே. ஆனாலும் புதிய கிணறுகள் தோண்டப்பட்டுக்கொண்டே இருப்பதால் இது ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது" என்று வனக்காவல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் நடந்த மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் அப்போதைய வனத்துறை அமைச்சர் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில் கடந்த 2021 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 283 சிங்கள்கள் உயிரிழந்துள்ளன. இதில், 21 சிங்கங்கள் கிணறுகளில் விழுந்தும், ரயில், வாகனங்களில் அடிபட்டும் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in