

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்திய ஆட்சி பணி அதிகாரியான சுப்ரியா சாகு காட்டுயிர் சார்ந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருவார். பல நேரங்களில் அவை வைரலாவதும் உண்டு. அந்த வகையில் திங்கள்கிழமை தனது டவிட்டர் பக்கத்தில் சுப்ரியா சாகு பகிர்ந்துள்ள இருவாச்சி குறித்த வீடியோ ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
அவரது பதிவு ஒரு வீடியோ, ஒரு புகைப்படம் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டுமே வான்பரப்பில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்ளும் இருவாச்சிகளை பற்றியதாகும். இவை தொழில்முறை புகைப்படக்கலைஞரான தனுபரன் என்பவரால் எடுக்கப்பட்டவை, விருதுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரியா பகிர்ந்துள்ள 14 விநாடி வீடியோவில், தலையில் தலைப்பாகை போன்ற அமைப்புடைய இரண்டு மலை இருவாச்சிகள் வட்டமிட்டபடி தங்களின் விஷேமான அலகை ஆக்ரோஷமாக பிளந்தபடி மோதிக்கொள்கின்றன. தங்களின் கருப்பு, மஞ்சள் நிற இறக்கைகளால் வெளிர்நீல வான்பரப்பை வண்ணமயாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேடிக்கைக்கு தன் பங்கிற்கு சூரியனும் பறவைகளுக்கு பின்னணியில் ஒளி வட்டம் பாய்ச்சி, அதன் இறக்கைகளை மின்னச்செய்து கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நெல்லியம்பதி மற்றும் வால்பாறையில் வந்து குவிந்துள்ள இருவாச்சிகள் வரவைத் தெரிவிப்பதற்காக பழைய இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் நெல்லியம்பதி மற்றும் தமிழ்நாட்டின் வால்பாறை பகுதிகளில் நூற்றுக்கணக்கான இருவாச்சிகள் வந்து கூடுகின்றன. இதோ தங்களின் அலகால் ஆக்ரோஷமாக நடுவானில் மோதிக்கொள்ளும் இருவாச்சிகளின் வீடியோ படம். இந்த ஆச்சரியமான வீடியோ தனுபரனால் எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அற்புதமான வீடியோ இதுவரை 50,000 பார்வையாளர்களை வென்றுள்ளது. ஆயிரத்துக்கும் அதிமானோர் அதனை விரும்பி உள்ளனர். பல பயனர்கள் சுவாரஸ்யமான பின்னுட்டங்களிட்டுள்ளனர். உண்மையில் எந்த ஒரு காட்டுயிர் அல்லது இயற்கை விரும்பும் புகைப்படக்கலைஞரும் பார்க்க வேண்டிய காட்சி என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "பறவைகள் இயற்கைக்கு இன்னும் அழகு சேர்த்து வாழ்க்கையை வளமாக்குகின்றன. ஒவ்வொருவரும் வளமான வாழ்க்கையை வாழவே விரும்புகின்றோம். எல்லா உயிர்களையும் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "வியக்கவைக்கும் மனிதர். பறவைகள், விலங்குகள் மீதான உங்கள் காதலுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.