Published : 30 Dec 2022 04:35 AM
Last Updated : 30 Dec 2022 04:35 AM

வைகை ஆறு சுத்திகரிப்பு நிலையத்தில் 2 லட்சம் லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிப்பு: எஞ்சிய கழிவு நீர் எங்கே செல்கிறது?

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரை பாலம் ஸ்டேஷன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 2 லட்சம் லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதம் உள்ள கழிவு நீர் எங்கே செல்கிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பது மாநகராட்சி, பொதுப்பணித் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆறு கரையோர வார்டுகளில் உள்ள வீடுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் செல்லூர், கோரிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை சுத்திகரிக்க கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 2 எம்எல்டி (20 லட்சம் லிட்டர்) கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்க முடிந்தது. அதனால் மீதம் உள்ள கழிவு நீர் ஆற்றில் கலந்தது. அதனால், சில மாதங்களுக்கு முன் 5 எம்எல்டி கழிவு நீர் முந்திரிதோப்பு பம்பிங் ஸ்டேஷனுக்கு பம்ப் செய்யப்பட்டது. ஆனாலும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது.

வைகை நதி மக்கள் இயக்கத்தினர் அண்மையில் நடத்திய ஆய்வில் விளாங்குடி, பெத்தானியாபுரம், தத்தனேரி, திருமலைராயர் படித்துறை, செல்லூர் எல்ஐசி பாலம் அருகே, ஆழ்வார்புரம் உட்பட பல்வேறு இடங்களில் கழிவு நீர் கலப்பதை உறுதி செய்தனர். அதனால், வைகை ஆற்றின் நீர் ஆதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கழிவு நீரை வைகை ஆற்றில் கலப்பதை ஒரு சில இடங்களைத் தவிர ஓரளவு தடுத்துவிட்டோம். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டதும் முழுமையாக கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 2 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு எக்கோ பூங்காவுக்கு லாரிகளில் கொண்டு சென்று செடிகளுக்குப் பாய்ச்சப்படுகிறது. மீதம் உள்ள தண்ணீரை ஆற்றில் விடுகிறோம். தனியார் இந்த தண்ணீரை கேட்டால் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x