

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை யானைகள் சேதப்படுத்துவதும் அடிக்கடி நடக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் எஸ்டேட் பகுதிக்குள் தனித்தனி கூட்டமாக சுற்றுகின்றன. பகல் நேரத்தில் தேயிலைக் காட்டிலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் நடமாடுகின்றன. அப்போது வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன. குறிப்பாக ரேஷன் கடை, சத்துணவு மையங்களை இடித்து ரேஷன் அரிசியை உட்கொள்கின்றன.
இதனால் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் புகும் யானைகள் வனத்துறையினர் கண்காணித்து அவ்வப்போது வனத்துக்குள் விரட்டுகின்றனர். இருப்பினும் யானைகள் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், வீடுகளில் வளர்க்கப்படும் பழ மரங்களின் வாசனையால் ஈர்க்கப்பட்டு யானைகள் வருவதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் கூறும்போது, “வால்பாறையில் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நுழைவதை தடுக்க வீடுகளில் யானைக்கு பிடித்த வாழை, பலா, கொய்யா மரங்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ரேஷன் கடைகளை தரை தளத்தில் இல்லாமல், மாடி வசதி கொண்ட கட்டிடங்களில் அமைக்க வேண்டும்” என்றனர்.