

விருதுநகர்: ஊட்டச்சத்துமிக்க உணவு உற்பத்தி செய்ய மண் வளத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வளமான மண்ணின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கும், மண்ணை வளமாக வைத்திருப்பதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு, ஆராய்ச்சியாளர் செல்வி ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச மண் அறிவியல் சங்கம் பரிந்துரைத்தது. அதையேற்று ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் 2014 முதல் கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இந்த ஆண்டுக்கான (2022) மண் தின கருப்பொருள் ‘மண் எங்கே உணவு அங்கே’ என்பதாகும். நிலையான மண் மேலாண்மை மூலம் 58 சதவீதம் அதிக உணவு உற்பத்தி செய்ய முடியும். ஒவ்வொரு அறுவடையின்போதும் மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுகிறது. மண்ணை நிலையான முறையில் நிர்வகிக்கவில்லை என்றால், அதன் வளம் படிப்படியாக குறைந்துவிடும்.
கடந்த 70 ஆண்டுகளில் உணவில்வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. உலக அளவில் 2 பில்லியன் மக்கள் நுண்ணூட்டச் சத்துகள் இல்லாததால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மண் வளத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.