

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஓடைக்குறிஞ்சி பூக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 61 வகை குறிஞ்சிப் பூக்கள் பூக்கின்றன. குறிப்பாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் 14 வகையான குறிஞ்சிபூக்கள் இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் குறிஞ்சி பூக்கள் குறித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில், அன்னை தெரசா மகளிர் பல்கலை.ஆய்வைத் தொடங்கி உள்ளது.
இது குறித்து உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியை உஷா ராஜ நந்தினி கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு முறை, 6 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 72ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் உள்ளன. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக அளவில் இப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கடந்த 3 ஆண்டுகளாக இந்தவகை குறிஞ்சி பூக்கள் மலரவில்லை. கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்னும் அடையாளம்காணாத மற்றும் ஆவணப்படுத்தப்படாத குறிஞ்சி வகைகள் இருக்கலாம். அவை குறித்தும், பல்வேறு கால நிலைகளில் பூக்கும் குறிஞ்சி பூக்களில் உள்ளஅறிவியல் கூற்றுகளை அடையாளம் காணும் வகையிலும், எங்கள் துறை மற்றும் தாவரவியல் துறை மாணவிகள் மூலம் குறிஞ்சி பூக்களை அடையாளம் காணும் ஆய்வைத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.