Published : 17 Nov 2022 09:14 AM
Last Updated : 17 Nov 2022 09:14 AM

200 ஆண்டுகளாக நிழல் தந்த ஆலமரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட ராஜாகவுண்டம்பாளையம் மக்கள்

திருச்செங்கோடு அருகே ராஜாகவுண்டம்பாளையத்தில் வேருடன் பிடுங்கி காலி இடத்தில் நடப்பட்ட ஆலமரத்தை தொட்டு மகிழ்ந்த கிராம மக்கள்.

நாமக்கல்: 200 ஆண்டுகளாக நிழல் தந்து, ஊருக்கு அடையாளமாக இருந்த ஆலமரத்தை சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்ற மனமில்லாமல் நிதி திரட்டி அம்மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருச்செங்கோடு-பள்ளிபாளையம் சாலையில் உள்ளது ராஜாகவுண்டம்பாளையம். இங்கு ஊருக்கு வெளியில் உள்ள முனியப்பன் கோயில் அருகே சாலையோரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது.

கிராமத்தின் அடையாளம்: இந்த ஆலமரம் அக்கிராமத்தின் அடையாளமாக விளங்கியது. மேலும், அப்பகுதி மக்களுக்கு நிழல் தரும் அரசனாக இருந்தது. தற்போது, திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையம் வரை உள்ள சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக சாலையோரம் உள்ள பல்வேறு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

எதிர்ப்பும்..அறிவுறுத்தலும்: இதில், ராஜாகவுண்டம்பாளையம் கிராமத்தின் அடையாளமாக விளங்கிய ஆலமரத்தையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், மரத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். எனினும், மரத்தை பிரிய மனமில்லாத கிராம மக்கள், மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு, பராமரித்து பாதுகாப்பது என முடிவு செய்தனர்.

நிதி திரட்டிய மக்கள்: இதற்காக கிராம மக்கள் நிதி திரட்டி 3 கிரேன், 2 பொக்லைன் உதவியுடன் ஆலமரத்தை வேருடன் பிடுங்கி அருகில் இருந்த காலி இடத்தில் நடும் பணியை மேற்கொண்டனர். இப்பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. அதுவரை கிராம மக்கள் ஒன்று கூடி நின்று மரம் அகற்றும் பணியை கண்காணித்தனர். மரத்தின் வேர் சிதையாமல் அகற்றப்பட்டதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேநேரம் மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டு, அடி மரத்தை மட்டும் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது வேதனை அளித்ததாகவும், இருப்பினும் மரத்தை எங்கள் குடும்ப உறுப்பினரைபோல கவனித்து மீண்டும் துளிர்க்க வைப்போம் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் பலர் கிராம மக்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x