Published : 15 Nov 2022 04:35 AM
Last Updated : 15 Nov 2022 04:35 AM

டெல்டா மாவட்டங்களுக்கு வலசை வரும் பறவைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை

திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு வலசை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளைப் பாதுகாக்க உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரை, திருவாரூர் மாவட்டத்தில் உதயமார்த்தாண்டபுரம், முத்துப்பேட்டை, வடுவூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். இந்த பகுதிகளுக்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் வரை ஆண்டுதோறும் இங்கு நிலவும் உகந்த தட்பவெட்ப சூழல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் வருகின்றன.

ரூ.10 லட்சம் அபராதம் வசூல்: இவற்றில் குறிப்பாக பறவைகள் இரை, தங்குவதற்கு தகுந்த சூழல், இனப்பெருக்கம் ஆகியவற்றுக்காக வலசை வருகின்றன. ஆனால், இந்த பறவைகளை சிலர் வேட்டையாடுவதும், அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பறவை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பறவைகள் வேட்டையாடியதாக திருவாரூர் மாவட்டத்தில் 12 பேர், நாகை மாவட்டத்தில் 34 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துஏறத்தாழ ரூ.10 லட்சம் வரை அபராதம் வசூலித்துள்ளனர்.

இது குறித்து பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநர் ஏ.குமரகுரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: சாதாரணமாக பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி பல்வேறு காலக்கட்டங்களில் வலசை செல்கின்றன. பல இடங்களில் இவை கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து, அவைகளுடன் மீண்டும் தனது வாழ்விடத்துக்கே திரும்புகின்றன. பறவைகள் உகந்த தட்பவெட்பம், பாதுகாப்பான சூழல், போதுமான அளவுக்கு இரை ஆகியவை இருந்தால் மட்டும் அங்கு தங்கும். பல பறவைகள் பிற நாடுகளுக்குச் செல்லும் வழியில் நம் நாட்டு சரணாலயங்களுக்கு வந்து செல்கின்றன.

சில இடங்களில் பாதுகாக்கப்படாத வனப்பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தங்கியிருக்கும் வலசை வந்த பறவைகளை உணவுக்காகவும், விளையாட்டாகவும் வேட்டையாடுவதும், அவற்றுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தொடர்ந்து இந்த குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும் என்றார்.

பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி: பாம்பே இயற்கை வரலாற்றுக் கழக துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: இந்த ஆண்டு, இங்குள்ள சரணாலயங்கள் மட்டுமன்றி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை தற்போது அதிக அளவில் காண முடிகிறது. இது பறவைகள் ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவைகள் வலசை வரும் இடங்களை பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே அடுத்த முறை அங்கு வரும். வலசை வரும் பறவைகளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஷ் கூறியது: பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயங்களுக்குள் யாரும் வேட்டையாட வாய்ப்பில்லை. இருப்பினும், இந்த பறவைகள் உள் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும்போது சிலர் வேட்டையாட வாய்ப்புள்ளது. ஆனாலும், கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகளை உள்ளூர்காரர்கள் வேட்டையாடுகின்றனர். அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குபதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். மேலும், பறவைகளை வேட்டையாடுவது குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வை வனத்துறையினரும் ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x