Published : 08 Nov 2022 03:40 PM
Last Updated : 08 Nov 2022 03:40 PM

35 வகை பாலூட்டிகள், 238 வகை பறவைகள்... - காவேரி தெற்கு வன உயிரின சரணாலய முக்கியத்துவம்

காவேரி தெற்கு வன உயிரின சரணாலய பகுதி

சென்னை: காவேரி தெற்கு வன உயிரின சரணாலய பகுதி 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள், 103 க்கும் மேற்பட்ட மரவகைகளை கொண்ட உயிர்பன்மை மிக்க பகுதி என்று தமிழக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக்காடுகளை காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவேரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவேரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகும் அமைகிறது.

இந்த சரணாலய பகுதி நீலகிரி உயிர் கோளக் காப்பகப் பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவேரி வனஉயிரின சரணாயலம், மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம், உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது.

இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மரவகைகளை கொண்ட உயிர்பன்மை மிக்க பகுதியாக காணப்படுகிறது. காவேரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர்நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இப்பகுதியானது 50 கி.மீ. தொலைவிற்கு காவிரி ஆற்றுப் படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக் காடுகளை உள்ளடக்கியது. இப்பகுதியினை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம், வன உயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும் என்றும் இதன் மூலம் காவேரி ஆற்றுப் படுகையின் மண் வளம் மற்றும் நீர் வளம் பாதுகாக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x