மரம் வளர்ப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்த பரிசுத் திட்டம்: கொன்றைக்காடு அரசுப் பள்ளிக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.
Updated on
1 min read

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே அரசுப் பள்ளி ஒன்றில், மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுக்களை வழங்கினார்.
பின்னர், மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பு அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுக்களை முறையாக வளர்த்து ஒராண்டு முடிவில், மரத்தை நன்றாக வளர்த்துள்ள மாணவர்களில் ஒருவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா இரண்டு பேருக்கு 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா மூன்று மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுக்கள் நடவு செய்யும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை 93 ஆயிரம் மரக்கன்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுக்கள் வளர்ப்பில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அரசுப் பள்ளி தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து, அவரது பள்ளி மாணவ, மாணவிகளை மரக்கன்று வளர்ப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in