Published : 29 Oct 2022 08:20 PM
Last Updated : 29 Oct 2022 08:20 PM

“மரபணு மாற்றுக் கடுகு... உணவுத் தட்டுக்கு வரும் விஷம்” - காரணங்களை அடுக்கும் பூவுலகின் நண்பர்கள் 

கோப்புப் படம்

சென்னை: மரபணு மாற்றுக் கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும், பரிசோதனை செய்வதற்குமான அனுமதிப்பது உணவுத் தட்டுக்கு வரும் விஷம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

மரபணு மாற்றுக் கடுகு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரபணு மாற்றப்பட்ட கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும், பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அத்துறையின் கீழ் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) 18.10.2022 அன்று பரிந்துரைத்துள்ளது. DMH-11(Dhara Mustard Hybrid-11) என்கிற மரபணு மாற்றம் செய்யப்பட்ட இக்கடுகை டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிர்களுக்கான மையம் (Centre for Genetic Manipulation of Crop Plants (CGMCP) உருவாக்கியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் தங்களது மரபணு மாற்று கடுகின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாக Bio Safety Research Level(BRL)-I (2010-2011, 2011-2012) மற்றும் BRL- II (2014-2015) எனும் ஆய்வுகளைக் குறிப்பிடுகிறது. GEACயின் அறிவுறுத்தலுக்குப் பின்பாக புதிய ஆய்வுகளை மேற்கொண்டதற்கான எவ்வித ஆவணங்களையும் தரவுகளையும் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பிக்கவில்லை.

மாறாக, கடுகு குடும்பத்தைச் சார்ந்த Canola என்கிற பயிரை Bar, Barnese, Barstar மூலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பயிருக்கான அனுமதியை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன. DMH-11உம் இந்த Canolaவை ஒத்தது என்பதால் இதற்கும் அனுமதி வழங்கலாம் என்பதற்கான ஆவணங்களையும் தரவுகளையும் CGMCP சமர்ப்பித்துள்ளது.

BT எனப்படும் bacillus thuringiensis கொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்டு பயிர்களால் தேனிக்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வறிக்கைகளையும் ஆவணங்களையும் CGMCP சமர்ப்பித்துள்ளது. வேறு பாக்டீரியாவைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட வேறு பயிர்களின் மீது நடத்தப்பட்ட வேறு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை DMH-11-காக ஆதாரங்களாக சமர்ப்பிப்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்த ஆதாரங்களை ஏற்று GEAC அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது.

அதேபோல இக்கடுகால் பிற பயிர்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வுகளை மதிப்பீடு செய்வதற்கு 25.08.2022ல் ஒரு நிபுணர் குழுவை GEAC அமைத்தது. அக்குழுவானது உலகளவில் பெறப்பட்ட ஆய்வுகள், பல அமைச்சகங்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் மேற்கூறிய மூன்று மரபணுக்களும் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்கள் மற்றும் பிற வண்டுகள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தாது என கருத்து தெரிவித்தது.

போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்திருக்கக் கூடாது. அதேவேளையில் இந்த நிபுணர் குழுவானது இந்திய தட்பவெப்ப சூழலில் இந்த DMH-11 கடுகு எந்த விதமான தாக்கத்தை உண்டாக்கும், தேனீக்கள் போன்ற உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தது.

இப்படி நிபுணர் குழுவே கூடுதல் ஆய்வுகள் தேவை என கருதியிருகும் நிலையில் அவசர அவசரமாக இக்கடுகிற்கான அனுமதியை GEAC வழங்கியிருப்பது இந்திய மக்கள் மீதும் நம் நாட்டின் சூழல் மீதும் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லாததை வெளிக்காட்டுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட DMH-11 கடுகால் பிற பயிர் வகைகளுக்கு எத்தைய பாதிப்புகள் உண்டாகும், பூர்விக கடுகு பயிர்கள் மீதான தாக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திறந்த வெளியில் பயிர் செய்யும்போது பூர்விக செடிகளின் மரபணுக்கள் மாற்றம் அடைவதற்கான சான்றுகள் உலகெங்கும் உள்ளன.

Gene Transfer போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் ஒருவேளை பிற தன்பால் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிர்களை இக்கடுகு பாதிக்குமா என்பது குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது நம் நாட்டின் மரபின வளத்தை பெரிதும் பாதிக்கும். அதேபோல இந்த DMH-11 கடுகானது தற்போது புழக்கத்தில் உள்ள கடுகை விட அதிகளவு விளைச்சலைக் கூட்டியதற்கான ஆய்வுகளும் இல்லை.

இந்தக் கடுகிற்கான மருத்துவப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கடுகு மனித ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் இல்லாமல் இதற்கு வழங்கப்படும் அனுமதி என்பது இந்திய மக்களை சோதனை எலிகளாக்கும் முயற்சியாகும்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அதை உருவாக்கிய நிறுவனங்கள் காப்புரிமை கோர முடியும். மரபணு மாற்றப்பட்ட DMH-11 கடுகிற்கு காப்புரிமை பெற்ற நிறுவனத்தின் அனுமதியோடுதான் அதனை விற்பனையோ அல்லது மறு உற்பத்தியோ செய்ய முடியும். இது விவசாயிகளின் விதை உரிமையை பறிக்கும் செயலாகும். மக்களின் உணவு இறையாண்மையின் மீதான தாக்குதலும் கூட.

இந்தக் கடுகிற்கு அனுமதி வழங்கப்பட்டால் நம் உணவுச் சங்கிலியில் விரைவில் இது இடம்பெறலாம். FSSAI அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த மரபணு மாற்றப்பட்ட( ஆண் தன்மை நீக்கப்பட்ட) கடுகு நம் உணவுத் தட்டிலும் இடம் பெறும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் நாட்டில் கடுகு எண்ணெய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வட மாநிலங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. எனவே இது தமிழ் நாட்டிற்கு முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். மனித நலனையும் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளாத ஒன்றிய அரசின் இம்முடிவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்க்கிறது.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர்களான கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோர் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்த்துள்ளனர். அதே நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் ஆபத்தான இம்முயற்சியை எதிர்க்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x