கோவை | சீரமைக்கப்பட்ட பல் மூலம் காட்டுப் பன்றியை வேட்டையாடும் புலிக்குட்டி

ஆனைமலை  புலிகள் காப்பகத்தில் சீரமைக்கப்பட்ட புலிக்குட்டியின் பல்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சீரமைக்கப்பட்ட புலிக்குட்டியின் பல்.
Updated on
1 min read

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மானாம்பள்ளி பகுதியில் வனத்துறை பராமரிப்பில் உள்ள புலிகுட்டிக்கு கோரைப் பல் சீரமைப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மானாம்பள்ளி வனப்பகுதியில், பிறந்து எட்டு மாதமேயான புலிக் குட்டியை கடந்த ஆண்டு செப்டம்பரில் வனத்துறையினர் மீட்டனர்.

அந்த புலிக் கூட்டி தாயை பிரிந்து தனியாக முள்ளம்பன்றியை வேட்டையாடும்போது, முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி, முகம், வாய்ப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. புலிக் குட்டியை கூண்டில் அடைத்து வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வந்தனர். சில மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு காயங்களிலிருந்து புலிக் குட்டி மீண்டு வந்தது.

இதையடுத்து, மானாம்பள்ளி அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் புலிக்குட்டியை பராமரிக்கவும், பயிற்சி அளிக்கவும் பத்தாயிரம் சதுர அடி அளவில் ரூ.75 லட்சம் மதிப்பில் இயற்கையான சூழலுடன் கூண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கூண்டில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டது.

புலிக் குட்டியின் கோரைப் பல் சேதமடைந்திருந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் மூலம் பல் சீரமைப்பு பணி நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் நேற்று முன்தினம் எக்ஸ்ரே எடுத்து சீரமைக்கப்பட்ட பல்லின் தன்மை குறித்தும், சீரமைப்பு பணி வெற்றி அடைந்துள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர். அதில் பல் முழு சீரமைப்பு பெற்றதாக வனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது முயல் மற்றும் காட்டுப் பன்றிகள் போன்றவற்றை புலிக் குட்டி வேட்டையாடி வருகிறது.

இன்னும் ஓராண்டு வரை பராமரித்து, 250 கிலோ எடை வந்த பிறகு புலியின் உடல்நிலை, வேட்டையாடும் தன்மையை பொறுத்து வனப்பகுதியில் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in