Published : 24 Oct 2022 12:54 PM
Last Updated : 24 Oct 2022 12:54 PM

வவ்வால்கள், பறவைகளுக்காக பட்டாசுகளை துறந்த கூடலூர் கிராம வாசிகள்

பட்டாசு வெடிப்பதால் பறவையினங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கூடலூர் அருகேயுள்ள கிராமங்களில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதில்லை என மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தீபாவளியை கொண்டாடும் வகையில், பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழும் நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் வனத்துறையினர்.

‘ஓய்வு விடுதிகள், சாலையோரங்கள் மற்றும் வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வன உயிரினங்களைப் பார்வையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசு உட்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்குமாறு பழங்குடியினர் மற்றும் முதுமலையை ஒட்டியுள்ள கிராம மக்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

அரசின் உத்தரவை மீறி யாரேனும் பட்டாசுகளை வெடித்து வன விலங்குகளை தொந்தரவு செய்தால், அவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

பட்டாசு வெடிக்காத கிராமங்கள்: வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பறவையினங்களுக்காக கூடலூரில் உள்ள கிராமவாசிகள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை, சுண்டவயல் கிராமத்தில் பகவதி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிய வகை வவ்வால்கள் வாழ்கின்றன. பட்டாசு வெடிப்பதால் சத்தம் அதிகரித்து வவ்வால்கள் மற்றும் பறவையினங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, பறவையினங்களை பாதுகாக்கும் வகையில் பாடந்தொரை, சுண்டவயல் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

பாடந்தொரை கிராம மக்கள் கூறும் போது, ‘‘எங்கள் கிராமத்தை சுற்றி வவ்வால்கள், நாரை, கொக்கு, நீர்க்காகம், நீர்க்கோழி, நாமக்கோழி உள்ளிட்ட பல பறவையினங்கள் காணப்படுகின்றன. பட்டாசு வெடித்தால் இந்த பறவையினங்கள் பாதிக்கப்படும் என்பதால், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறோம்’ என்றனர்.

பட்டாசு வெடித்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை, பிற உயிரினங்களுக்காக பட்டாசுகளை தவிர்ப்பதும் மகிழ்ச்சி என்கின்றனர் இந்த கிராம வாசிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x