முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் செயல்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்த முயற்சியில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய 3 முக்கிய இயக்கங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாட்டு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது.

அரசாணை வெளியீடு: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையை சுற்றுச்சூழல், வனத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நிர்வாகக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும். இக்குழுவில் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன்எம்.நிலேகனி, ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜாஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், அரசு தலைமைச் செயலர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர், தொழில், நகராட்சி நிர்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம்,மீன் வளம், மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகிய துறைகளின் செயலர்கள் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள். குழு ஒருங்கிணைப்பாளராக சுற்றுச்சூழல் துறை செயலர் செயல்படுவார்.

3 மாதங்களுக்கு ஒருமுறை: இக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்பகூடும். தனது குறிக்கோள்களை எட்டுவதற்கான செயல்முறைகளைதானே வகுத்துக்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘இப்படி ஒரு குழு அமைக்கவேண்டும் என்ற எங்கள் அமைப்பின் நீண்டகால கோரிக்கையைதமிழக அரசு நிறைவேற்றியதற்கும், அதில் எங்கள் அமைப்புபங்காற்ற வாய்ப்பு அளித்ததற்கும்முதல்வர், சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் செயலருக்கு நன்றி’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in