

காலநிலை மாற்றத்திற்கு எதிராக கால்நடை மேய்ச்சல் கைகொடுப்பதாக 16 ஆண்டு கால ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. கடந்த 2005 வாக்கில் இந்த ஆய்வு தொடங்கி உள்ளது. மண் மாதிரிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் தற்போது காலநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் சிக்கி உள்ளது. அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. அமெரிக்காவில் சூறாவளி, உலகின் மற்றொரு பக்கமான ஆப்பிரிக்க கண்டத்தில் வறட்சி, மற்றொரு பக்கம் கடல்நீர் மட்டம் அதிகரிப்பு, நிலச்சரிவு என அதன் தாக்கம் நீள்கிறது. இதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இத்தகையச் சூழலில் இந்த ஆய்வு ஆறுதல் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆய்வு பணிக்காக கால்நடை மேய்ச்சல் உள்ள நிலங்கள் மற்றும் காலியாக உள்ள வேலி போட்ட மேய்ச்சல் இல்லாத நிலங்களின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் மேய்ச்சல் உள்ள நிலங்களின் மண்ணில் கார்பன் நிலை மாறி மாறி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதுவே மேய்ச்சல் இல்லாத நிலங்களின் மண்ணில் கார்பன் நிலை 30 - 40 சதவீதம் கூடுதலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவு Proceedings of the National Academy of Sciences என்ற ஆய்விதழில் வெளியாகி உள்ளது. மாறிவரும் காலநிலைக்கு இது இயற்கையான வழியில் தேர்வு கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் தொடக்கப் புள்ளியாக சுற்றுச்சூழல் அறிவியல் மைய உதவி பேராசிரியர் சுமந்தா பாக்சி தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக முன்னெடுத்துள்ளார். இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளில் மேய்ச்சலின் தாக்கம் என்ற பெயரில் இது தொடங்கியுள்ளது. அவரது குழுவினர் சில சுவாரஸ்ய தகவல்களை இந்த ஆய்வின்போது கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு பணியில் இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்சி) இணைந்து பணியாற்றி உள்ளது.