Published : 19 Oct 2022 06:21 PM
Last Updated : 19 Oct 2022 06:21 PM

பாறு கழுகுகளைப் பாதுகாக்க குழு அமைத்தது தமிழக அரசு: பணிகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: பாறு கழுகுகளைப் பாதுகாக்க மாநில அளவிலான குழுவை அமைத்து தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கையானது பல காரணங்களால் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தில் கழுகுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான பாறு கழுகுப் பாதுகாப்புக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டேராடூன் இந்திய வனவிலங்கு நிறுவனம், கோவை பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றள்ளது. இந்தக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்தக் குழு மேற்கொள்ள முக்கியப் பணிகளின் விவரம்:

  • 2022-2025 ஆம் ஆண்டிற்கான பாறு கழுகு பாதுகாப்புக்கான தமிழ்நாடு செயல் திட்டம் தயாரித்தல்
  • பாறு கழுகுகளின் முக்கிய உணவான கால்நடைகளின் சடலங்களில் விஷம் உண்டாவதைத் தடுத்தல்.
  • இறந்த கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிர்வகித்தல் மற்றும் கால்நடைகளின் சடலத்தின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல்.
  • பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்படாத வனப்பகுதிகளில் வன விலங்குகளின் சடலங்களை முறையாக அப்புறப்படுத்துதல்.
  • பாறு கழுகுகளுக்கு வழங்கப்படும் நச்சுத்தன்மையுள்ள மருந்துகளை தடை செய்வதற்கான ஒருங்கிணைந்த, நன்கு நிறுவப்பட்ட மற்றும் திறமையான ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துதல்.
  • பாறு கழுகு பாதுகாப்பிற்கென இனப்பெருக்க மையங்களை அமைத்தல்.
  • காயம்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பாறு கழுகுகளைப் பராமரிப்பதற்காக பாறு கழுகு மீட்பு மையங்களை அமைத்தல்.
  • நாடு தழுவிய பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் பங்கேற்று, பாறு கழுகுகளின் இருப்பிடங்களைக் கண்டறிதல் மற்றும் தகுந்த இடைவெளியில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் பணித்திறனை வளர்த்தல்.
  • தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்தல்.
  • தமிழ்நாட்டில் கழுகு பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் கழுகு பாதுகாப்பு மண்டல வலையமைப்பை மேம்படுத்துதல்.
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி முயற்சிகள் மற்றும் களக் கல்வி பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பாறு கழுகு இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x