

காகங்கள் கொத்தியதால் இறகில் காயம் அடைந்து கீழே விழுந்த அரிய ஆந்தையை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள மரத்தில் அரிய வகை ஆந்தை இருந்தது.
பகல் நேரத்தில் பறக்க முடியாமல் திணறியது. வித்தியாசமாக இருந்ததால் காகங்கள் ஆந்தையை கொத்த தொடங்கின. ஆந்தை பறக்க முடியாமல் தரையில் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் ஆந்தையை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் பாரதி பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வித்தியாசமாக இருந்த ஆந்தையை தூக்கி பார்த்து ‘செல்ஃபி’ எடுத்தனர்.
அப்போது வனத்துறை ஊழியர் கண்ணதாசன் உள்ளிட்டோர் அங்கு வந்து, அந்த ஆந்தையை மீட்டனர். இதுபற்றி கண்ணதாசன்கூறுகையில், "ஆசிய வகை குகை ஆந்தை இது.
காகங்கள் கொத்தியதால் இறகு பகுதியில் காயம் அடைந்துள்ளது. இரவு நேரத்தில் முழு திறனுடன் இருக்கும். பகலில் அதனால் அவ்வளவாக செயல்பட இயலாது. அதை வனத்துறைக்கு எடுத்துச் சென்று பராமரிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.