Published : 10 Oct 2022 04:30 AM
Last Updated : 10 Oct 2022 04:30 AM

குமரிக்கு ஓராண்டில் 170 வகையான 70,000 பறவைகள் வருகை: ரஷ்யா, சீனாவில் இருந்து அதிகமானவை முகாம்

நாகர்கோவில்

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 170 வகையான 70,000 பறவைகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வலசை வந்திருப்பது தெரியவந்துள்ளது.

வனத்துறை சார்பில் நாகர்கோவில் அருகிலுள்ள புத்தளம் பகுதியில், ‘உலக புலம் பெயர்ந்த பறவைகள் தின’ நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

ரஷ்யா, சைபீரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள ஆளா, உள்ளான் போன்ற பறவைகளை பார்வையிட்டு, அவற்றை பறக்க விட்டனர்.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா பேசியதாவது: புலம்பெயர்ந்த பறவைகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற போது 170 வகையான 70,000 பறவைகள் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சைபீரியா, ரஷ்யா, சீனா, ஆர்ட்டிக் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன. இங்கிருந்தும் பறவைகள் பிற நாடுகளுக்குச் செல்கின்றன.

மேலும், சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஓராண்டில் 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட உதவி வன அலுவலர் மனாசீர் ஹலீமா, பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன், சுவாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x