

பல்வேறு வகையான மரங்கள், மூலிகைச் செடிகள், மூங்கில் வனம், பூச்செடிகள் இருப்பதால் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் இடமாக கோவை வெள்ளலூர் குளக்கரை திகழ்ந்து வருகிறது.
எனவே, இங்குள்ள பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தும் பணியை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வந்தன.
2021 அக்டோபர் முதல் 2022 செப்டம்பர் வரை நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 101 வகை பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளக்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 328 வகை பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதில், 31 சதவீத வகைகள் வெள்ளலூர் குளக்கரையில் தென்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு குறித்து டிஎன்பிஎஸ் ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் கூறியதாவது: தேனீக்கள் போன்றே பட்டாம் பூச்சிகள் மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், பட்டாம்பூச்சிகள் நிறைந்திருக்கும் இடம் உயிர்ச்சூழல் மிகுந்த இடமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமையில் குளக்கரையில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டோம். பட்டாம்பூச்சிகள் வெளியில் உலவும் நேரமான சூரிய உதயத்துக்கு பிறகான நேரம் முதல் நண்பகல் வரை இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
சதர்ன் பேர்டு விங், ஃபுளூ மார்மன், சாக்லேட் ஆல்பட்ராஸ், பேம்பூ ட்ரீபிரவுன், மெடஸ் பிரவுன் ஆகிய பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் வனப்பகுதியில் மட்டுமே தென்படுபவை. அவற்றை வெள்ளலூர் குளக்கரையில் காண முடிந்தது. கிரே பேன்சி பட்டாம்பூச்சியை கோவை நகரப்பகுதியில் காண்பது அரிது. காடுகளின் நீரோடைகளுக்கு அருகே அவற்றை காண முடியும். அதையும் குளக்கரையில் காண முடிந்தது.
இதுதவிர, லார்ஜ் ஓக் ஃபுளூ, டெயில்டு பாம்ஃபிளை, காமன் லெபேர்டு, பீகாக் பேன்சி, இந்தியன் சன்பீம், ரெட்ஸ்பாட், இந்தியன் ரெட் ஃப்ளாஷ், பனானா ஸ்கிப்பர், காமன் ரெட் ஐ, பேல் பாம்-டார்ட், டார்க் பாம்-டார்ட், ஜோக்கர், காமன் காஸ்டர், ஆங்கிள் காஸ்டர், சில்வர்லைன், ஆப்பிரிக்கன் மார்பிள்ட் ஸ்கிப்பர் உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் ஆய்வு முழுவதும் நல்ல எண்ணிக்கையில் தென்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈர நிலங்களின் முக்கியத்துவம்: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் கூறும்போது, “ஒவ்வொரு முறை கணக்கெடுப்புக்கு செல்லும்போதும், சராசரியாக 50 வகையான பட்டாம்பூச்சிகளை காண முடிந்தது.
இந்த கணக்கெடுப்பானது பட்டாம்பூச்சிகளுக்கு ஈரநிலங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும், அவற்றின் வாழிடத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மேலும், குளக்கரையை சுற்றியுள்ள பல்லுயிர் சூழலையும் இது காட்டுகிறது.
ஒரு குளக்கரையை சுற்றி 101 வகை பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளது என்பது நல்ல எண்ணிக்கையாகும். இந்த கணக்கெடுப்பை கே.சதீஸ்குமார், கே.ஸ்ரவன்குமார், ஹெச்.ரமணசரண், சி.வி.நிஷாந்த், ஹெச்.தெய்வப்பிரகாசம், எஸ்.மகேஷ்குமார், நாகராஜ் ஆகியோர் அடங்கிய டிஎன்பிஎஸ் குழுவினர் மேற்கொண்டனர்” என்றனர்.