நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வலசை வந்த தடித்த அலகு மண் கொத்தி பறவை

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வலசை வந்த தடித்த அலகு மண் கொத்தி பறவை
Updated on
1 min read

திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்துக்கு அரிய வகை பறவையான தடித்த அலகு மண்கொத்தி, ஐரோப்பிய கடற்கரை பகுதியில் இருந்து வலசை வந்துள்ளதால் இயற்கைஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகுதியில் 420ஏக்கரில் நஞ்சராயன் குளம்உள்ளது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வலசை வரும் வெளிநாட்டு பறவைகளும், இங்கு வந்து தங்கிச்செல்கின்றன.

இதனால், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து, இதன் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், நஞ்சராயன் குளத்துக்கு அரிய வகை பறவையான ‘பிராட் ஃபில்டு சாண்ட் பைப்பர்’ என்ற தடித்த அலகு மண்கொத்தி பறவை வலசை வந்துள்ளது. இப்பறவை ஐரோப்பிய கடற்கரைகளில் வாழக்கூடியது.

வடக்கு ஐரோப்பா, சைபீரியாவில் இருந்து இப்பறவை வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் இயற்கை கழகத்தின் தலைவர் ரவீந்தர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘எங்கள் கழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் இளங்கோவன் என்பவர் நஞ்சராயன் குளத்தை பார்வையிட்டபோது, இந்த பறவையை புகைப்படம் எடுத்துள்ளார்.

இது மிகவும் அரிய வகை பறவை. எடை குறைவாக உள்ள இப்பறவை, இத்தனை மைல்கள் கடந்து வருவதே ஆச்சர்யம். திருப்பூரில் முதல்முறையாக இப்பகுதிக்கு வந்துள்ளது. நஞ்சராயன் குளத்தில் 181 வகை பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in