Published : 21 Sep 2022 06:34 AM
Last Updated : 21 Sep 2022 06:34 AM

இமயமலையிலிருந்து வால்பாறைக்கு சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் வலசை

பொள்ளாச்சி

இமயமலை பகுதியில் இருந்து சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் வால்பாறை பகுதிக்கு வலசை வருவது அதிகரித்துள்ளது. இது வனம் வளமாக உள்ளது என்பதற்கான குறியீடு என்று, இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குருவி இனங்களில் ஒன்றான வாலாட்டி குருவிகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படும். இதில் வெள்ளை நிற வாலாட்டி குருவிகள், தென்னிந்திய மலைப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. ஆனால் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற வாலாட்டி குருவிகள், குளிர் காலத்தில் மட்டும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும். இமயமலையில் காணப்படும் மஞ்சள், சாம்பல் நிற வாலாட்டி குருவிகள், அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவு, குளிர் ஆகியவற்றின் காரணமாக, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் வலசை செல்ல தொடங்கும். செப்டம்பர் மாதத்தில் தென்னிந்தியா மற்றும் இலங்கையை அடைகிறது. சுமார் 8 மாதங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கை பகுதியில் தங்கியிருந்த பின்னர், மீண்டும்

இடம்பெயர்ந்து ஏப்ரல் மாதம் இமயமலைக்கு திரும்புவது வழக்கம். தற்போது, பருவமழைக்கு பின்னர் வால்பாறை பகுதியில் வெயில் நிலவுவதால், இமயமலையிலிருந்து சாம்பல் நிற வாலாட்டி குருவிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியரும், பறவை ஆர்வலருமான செல்வகணேஷ் கூறும்போது, "சிறு பறவை இனத்தைச் சேர்ந்தவை வாலாட்டி குருவிகள். இந்த குருவி 18 முதல் 19 செ.மீ. நீளம் கொண்டது. இப்பறவையின் கழுத்து மற்றும் வால்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூச்சிகளை உணவாக உண்ணும் இப்பறவைகள், ஏப்ரல் முதல் ஜூலை வரை இனப்பெருக்கம் செய்யும். வேகமாக ஓடும் ஆறு மற்றும் நீரோடை அருகே கூடு கட்டி வாழும் பண்பு கொண்டது.

இனப்பெருக்க காலத்தில் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பெரிய நீர் நிலைகள், வனப்பகுதியில் பல சிற்றோடைகள் என வனப்பகுதி வளமாக இருப்பதால், வால்பாறை பகுதிக்கு சாம்பல் நிற வாலாட்டி குருவிகளின் வருகை அதிகரித்துள்ளது. இது வனம் வளமாக இருக்கிறது என்பதற்கான குறியீடாகவே கருத வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x