Published : 28 Aug 2022 04:45 AM
Last Updated : 28 Aug 2022 04:45 AM

பேரணாம்பட்டு அருகே ஆண் சிறுத்தை பட்டினியால் இறந்ததா? - மாவட்ட வன அலுவலர் விளக்கம்

பேரணாம்பட்டு அருகே சேராங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) நாக சதீஷ் கிடிஜாலா.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் இறந்துகிடந்த சிறுத்தை பட்டினியால் இறந்ததா? என்ப தற்காக உடல் பாகங்கள் ஆய்வுக் காக சேகரித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த சேராங்கல் காப்புக் காட்டையொட்டி வேணு (50) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலத்துக்குச் சென்றபோது அங்கு சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று முதற் கட்ட விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) நாக சதீஷ் கிடிஜாலா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நேரில் விசாரணை செய்ததுடன் உடல் பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) நாக சதீஷ் கிடிஜாலா மேற்பார்வையில் மேல்பட்டி கால்நடை மருத்துவர் பவித்ரா, அரவட்லா கால்நடை உதவி மருத்துவர் தினேஷ்பாபு ஆகியோர் நேற்று உடல் பரிசோ தனை நடத்தினர்.

அப்போது, சென்னை உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இளநிலை ஆய்வாளர் சுரேஷ்கோபி, வன உயிரின தன்னார்வலர் எட்வர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உயிரிழந்தது 4 முதல் 5 வயதுடைய ஆண் சிறுத்தை. மின்சாரம் பாய்ந்தோ அல்லது வேட்டையாடப்பட்டு இறக்க வில்லை என்று தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) நாக சதீஷ் கிடிஜாலா, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஆண் சிறுத்தை இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகியுள்ளன. சிறுத்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது குறித்து கடந்த 26-ம் தேதி மாலை எங்களுக்கு தகவல் கிடைத்தது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரையின்படி பகல் நேரத்தில் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் இன்று (27-ம் தேதி) காலை 9 மணியளவில் மருத்துவர் கள் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதன் முதற்கட்ட தகவலாக சிறுத்தை இயற்கையான முறையில் இறந்துள்ளது. அதன் உடலில் விலங்குகளுடன் ஏற்பட்ட சண்டை அல்லது மின்வேலி அல்லது வேட்டையாடப்பட்டதற்கான எந்த காயங்களும் இல்லை. சிறுத்தையின் வயிற்றில் எந்த உணவும் இல்லை என்பதால் உணவில் விஷம் வைத்து கொல்லப்படவில்லை என உறுதியானது.

சிறுத்தை பட்டினியால் இறந்திருக்கலாம் என கருதப் படுகிறது. அதேநேரம் தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதி சிறுத்தைகள் வாழ்வதற்கான இடமாகவும், மொத்தம் 10 சிறுத்தைகளின் நடமாட்டம் இருப் பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சிறுத்தைக்கு உடல் ரீதியான பிரச்சினை ஏற்பட்டு சாப்பிடாமல் இருந்து இறந்ததா? என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முக்கிய உடல் பாகங்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் உரிமையாளர் தாமதமாக தகவல் சொல்லியுள்ளாரா? என்றும் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவரது செல்போனையும் ஆய்வு செய்துள்ளோம்’’ என்றார்.

இறந்த 3-வது சிறுத்தை

பேரணாம்பட்டு அருகேயுள்ள கோக்கலூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர்.

பின்னர், சிகிச்சைக்காக வேலூர் அருகேயுள்ள அமிர்தி சிறு வன உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்றபோது இறந்தது.

அதேபோல், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாத்கர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 வயதுள்ள சிறுத்தை குட்டி இறந்துகிடந்தது. தற்போது, சேராங்கல் பகுதியில் இறந்தது 3-வது சிறுத்தை என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x